உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து: 15 வயது சிறுவன் பலி

வவுனியா, பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மடுக்குளம் பகுதியை சேர்ந்த ச.சதுசன் (வயது – 15) என்ற சிறுவனே மரணமடைந்துள்ளான்.

பூவரசன்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் பயணித்துள்ளது. இதன்போது திடீர் என சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.விபத்தில் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குறித்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும், இருவரில் ஒரு சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணித்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.