
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி எழுதி வைத்த உருக்கமான கடிதம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆசிரியை தன்னை துன்புறுத்தியதால் தற்கொலைச் செய்து கொள்வதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவைச் சேர்ந்தவர் மேனகா (40). சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் இவர் கணவனை இழந்து, வாடகை வீட்டில் மகள், மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவருடைய மகள் கீர்த்தனா (17), தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற கீர்த்தனா, மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவர் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதுவண்ணாரப்பேட்டை போலீஸார், மாணவியின் தற்கொலை குறித்த காரணத்தை அறிய மாணவியின் புத்தகப் பையை சோதனையிட்டனர்.
அப்போது, மாணவியின் புத்தகப் பையில் ஒரு துண்டுச் சீட்டில் மாணவி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர், “நான் இந்த முடிவு எடுக்க காரணம் என்னோட பொருளாதார பிரிவு மேடம் தான். அவங்க இன்னைக்கு என்னை எல்லார் முன்னிலையிலும் ரொம்ப….” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.
அதனை அடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க சம்மதிப்போம். இல்லாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்றனர்.
இதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவொற்றியூர் பொலிஸ் உதவி கமிஷனர் முகமது நாசர், மாணவியின் தாய் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
