பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்று, எஞ்சியுள்ள ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நாவல, ராஜகிரிய பகுதியில் உள்ள அவரது விகாரைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், விகாரையில் இருந்த பிக்குகள், ஞானசார தேரர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்புக்கு முன்னர், ஞானசார தேரர் தனது ஆறு ஆண்டு சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்தார். எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அவரது ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் பெரும்பகுதியை அவர் மீண்டும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என்றும் அது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று நீதியரசர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, அந்த மன்னிப்பு தன்னிச்சையான முறையில் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களின் நம்பிக்கையையும் இயற்கை நீதிக் கோட்பாடுகளையும் மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை ஞானசார தேரர் அனுபவித்து வந்த நிலையிலேயே, 2019 மே மாதம் அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருந்தார்.










