உக்ரைன் மீது ரஷ்யா புதிய பாரிய தாக்குதலை நடத்துவதற்குத் தயாராகி வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்காக நியூயோர்க்கில் தங்கியுள்ள செலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமை சந்தித்த பின்னர் வெளியிட்ட தகவலில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு, குளிர்காலத்துக்கான தயாரிப்புகள் மற்றும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு மேலதிக வான் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதனிடையே, ரஷ்யப் படைகள் அண்மைய வாரங்களில் இரவு நேரத் தாக்குதல்களுக்கு மட்டுப்படாமல், பகல் நேரங்களிலும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதிய ஜெட் இயந்திரம் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சாத்தியமான உடன்பாடு குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ரஷ்ய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தத் தயாராக இருப்பதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.









