உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய ‘கோட்டை நகரங்கள்’ (Fortress Cities) மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரங்களான ஸ்லோவியன்ஸ்க், கிராமட்டோர்ஸ்க், ட்ரூஷ்கிவ்கா மற்றும் கொஸ்தியந்தினிவ்கா ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றுவதன் மூலம், டொன்பாஸ் பகுதியின் மீதமுள்ள பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா முயற்சித்து வருகிறது.
குறிப்பாக கொஸ்தியந்தினிவ்கா நகரைச் சுற்றி ரஷ்யப் படைகள் ஊடுருவ முயற்சித்து வருவதாகவும், அதேவேளை ஸ்லோவியன்ஸ்க் நோக்கிய உக்ரைனின் இராணுவ விநியோகப் பாதைகளை சீர்குலைக்கும் வகையில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்றுவது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய இராணுவ வெற்றியாக அமையும். எனினும், உக்ரைன் தனது பாதுகாப்பு நிலைகளை தொடர்ந்து பலப்படுத்தி வருவதுடன், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.











