ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலையடுத்து, சவூதி அரேபியா தனது முக்கிய கிழக்கு – மேற்கு(East-West) எண்ணெய் குழாயை தற்காலிகமாக மூடியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்ததுடன், குழாய் கட்டமைப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,200 கிலோமீற்றர் நீளமுடைய இந்த எண்ணெய் குழாய், பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து செங்கடல் கரையிலுள்ள யன்பு துறைமுகத்திற்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்கிறது. சமீப மாதங்களில் தினசரி சுமார் 4 முதல் 5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இந்த வழியாக எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை ஏற்றுமதி செய்ய சவூதிக்கு இந்தக் குழாய் முக்கிய மாற்று வழியாக உள்ளது. இதனால், அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருப்பது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.
தாக்குதல் ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாக சவூதி அரேபியாவும் ஈராக்கும் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு யார் நேரடியாக பொறுப்பு என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் இயங்கும் பகுதிகளுடன் தாக்குதல் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தைத் தொடர்ந்து ஈராக்கு ஒரு இராணுவ அதிகாரியை பதவி நீக்கியுள்ளது.
இந்நிலையில், யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பு செங்கடலின் முக்கிய கடல்வழியான பாப் அல்-மந்தப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியிருப்பதும் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.











