கொள்வனவு நடவடிக்கைகளில் ஊழல் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காலணிப் பொலிஷ் டின்கள் மற்றும் உடலில் அணியும் கமராக்கள் கொள்வனவு தொடர்பாக முறைகேடான ஒப்பந்தங்கள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டி, சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று பரவி வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பதிவில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது அவரது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளுக்கான காலணிப் பொலிஷ் டின்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம், உரிய அரச கொள்வனவு நடைமுறைகளுக்கு அமைவாகவே வழங்கப்பட்டதாக பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். இதற்காக பத்திரிகைகளில் விலைமனுக் கோரல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதுடன், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பரிந்துரைகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்வனவுக்காக குறைந்த விலையை முன்வைத்த நிறுவனத்துக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் பொலிஸ் திணைக்களத்துக்கு நிதி நன்மை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் செயற்பாட்டில் எந்தவொரு தனிப்பட்ட தொடர்புகளும் அல்லது செல்வாக்குகளும் பயன்படுத்தப்படவில்லை எனவும், பொலிஸ் மா அதிபரின் பெயரை இந்தக் கொள்வனவுடன் தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, பொலிஸ் அதிகாரிகளுக்கு உடலில் அணியும் கமராக்களை வழங்குவதற்கான கொள்வனவு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்வனவுக்காக 26 நிறுவனங்கள் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றில் 15 நிறுவனங்கள் தங்களது கமரா மாதிரிகளையும் சமர்ப்பித்துள்ளன. எனினும், இதுவரை எந்தவொரு நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விலைமனுக்கள் விலைமதிப்பீட்டுக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது பொதுமக்களின் பொலிஸார் மீதான நம்பிக்கையை பாதிப்பதுடன், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான பொய்யான மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









