இலங்கை தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்த ஹர்த்தால் நிறைவு : வடக்கு கிழக்கு மக்கள் பூரண ஆதரவு?

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழரசுக்கட்சியால் இன்று திங்கட்கிழமை வடக்கு கிழக்கு முழுவதும் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஹர்த்தால் அழைப்பானது இலங்கை தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினரால் மாத்திரம் ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவித்து சில வர்த்தக சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூகத்தினர் என பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சியிள் ஹர்த்தால் அழைப்பிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் சில பகுதிகளில் பூரண கடையடைப்புடன் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கடைகள் மற்றும் சந்தை பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மட்டக்களப்பு நகர் பகுதி வாழைச்சேனை கிரான் உள்ளிட்ட மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் ஒரு சில கடைகள் பூட்டப்பட்டும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இயல்பு நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கியிருந்த போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் காத்தான்குடி ஓட்டமாவடி ஏறாவூர் போன்ற பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு நகர் பகுதிகள் இயல்பு நிலையில் காணப்பட்டது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மாத்திரம் கடைகள் பூட்டப்படடிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை நகரில் ஒருசில கடைகளைத் தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்ததையும் சில கடைகள் வழமையை விட தாமதமாக திறக்கப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக தபால்நிலைய வீதி நீதிமன்ற வீதிஇ திருஞானசம்பந்தர் வீதி மூன்றாம் கட்டை சந்தி பகுதிகளில் உள்ள சில கடைகள் மூடப்பட்டு இருந்ததுடன் சில தாமதாக திறக்கப்பட்டு இயங்கியதை அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று திருகோணமலை மாவட்ட பிரதான சந்தை வழமைபோன்று இயங்கியது

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் சில உணவகங்கள் மற்றும் சில வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் யாழ். நகர் வர்த்தகர்கள் ஹர்தாலுக்கான ஆதரவை வழங்காததால் நகர்பகுதி வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கியது. யாழ் மாவட்டத்தின் ஏனைய பகுதிகள் சில பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும் சில நகர் பகுதிகள் வழமை போல் இயங்கியதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நகர் பகுதியில் திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை மூடுமாறு தெரிவித்து மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் வர்த்தகர்களை அச்சுறுத்தியதாக குழப்ப நிலை ஒன்று மட்டக்களப்பில் உருவானது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் நகர் பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக சென்று கடையை மூடுமாறும் அல்லது வர்த்தக நிலையத்துக்கான அனுமதிப்பத்திரத்தை நிறுத்தி விடுவேன் என அச்சுறுத்தியதாகவும் சில வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக முடக்கம் இடம்பெறவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச தனியார் போக்குவரத்து சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல் அரச தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.