இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 32 கிலோ தங்கத்துடன் தமிழகத்தில் ஐவர் கைது

இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் தெரிக்கப்படும் சுமார் 32.869 கிலோ நிறையுடைய 20.21 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இந்தியாவின் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் தமிழக கடற்பரப்பில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, பதிவு இலக்கமற்ற மீன்பிடி படகு ஒன்றை மணலி தீவு அருகே அவதானித்த இந்திய கடலோர காவல் படையினர் அங்கு விரைந்த போது அதிலிருந்தவர்கள் படகில் இருந்த தங்கத்தை கடலில் வீசிவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போது, படகை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் அதிலிருந்த மூவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழகத்தின் வேதாளையை சேர்ந்த மேலும் இருவரை படகொன்றுடன் கைது செய்த அதிகாரிகள் அவர்களின் ஜாக்கெட்டில் எட்டு பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோகிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணிகள் இரண்டு நாட்களாக இடம்பெற்ற நிலையில், நேற்று வியாழக்கிழமை சுமார் 11.6 கிலோகிராம் தங்கம் கடலில் இருந்து ஆழ்கடல் சுழியோடிகளின் உதவியோடு மீட்கப்பட்டதாக, தெரியவருகின்றது.

கடத்தல் வலையமைப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் தொடர்பான மேலதிக விபரங்களை வெளிக்கொண்டு வர தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்