இலங்கையில் அதிகரிக்கும் வீதிச் சிறுவர்கள்

அண்மை காலத்தில் சமூக ஆய்வுகளின்படி, இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் டொக்டர்கள் சங்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என்றும் பெரியவர்களின் கவனிப்பின்றி கணிசமானோர் தெருக்களில் சுற்றித் திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர்கள் பிச்சை எடுப்பது, சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, மது மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவற்றுக்கு பலியாகி வருவதாக கூறப்படுகிறது.

கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் வீதிச் சிறுவர்களைக் கணிசமான அளவில் காணலாமெனவும் ஊட்டச்சத்து குறைபாடு, சுவாச நோய்கள் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு அவர்கள் இலகுவாக இரையாகலாமென்றும் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, வறுமை, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளால் புறக்கணிக்கப்படும் விளிம்பு நிலை சமூகங்கள் மீதும் அனைவரது கவனமும் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

இல்லை என்றால் அவற்றில் பல சமூக, பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சனைகள் உருவாகலாம் என நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்டங்களிலும், சில மதப் பிரிவுகளிலும், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட குழுக்கள் இருப்பதால், அதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும் அவர்களின் உடல்நிலையை மேம்படுத்த வேண்டுமென்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்