தமிழ்நாடு-உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் வலி மாத்திரைகளை, இன்று திங்கட்கிழமை பறிமுதல் செய்த ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார், கடத்தலில் தொடர்புடைய மூவரை கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தலைத்தோப்பு கடற்கரை பகுதியில் இருந்து, இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு பொலிஸார் தலைதோப்பு கடற்கரையில ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது டிராக்டரில் இருந்து பெட்டிகள் இறக்கி கொண்டிருந்தவர்கள், பொலிஸாரை கண்டதும் டிராக்டரை எடுத்துக்கொண்டு தப்பி சென்ற நிலையில், கடற்கரையில் விட்டு சென்ற தலா 80 கிலோ எடை கொண்ட 10 பெட்டிகளில் லட்சக்கணக்கான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்த பொலிஸார், உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் டிராக்டருடன் தப்பிச் சென்ற நபர்களை கியூ பிரிவு மற்றும் உச்சிப்புளி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.