
தமிழ்நாடு-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபா மதிப்பிலான 60 மூட்டை சமையல் இஞ்சி மூட்டைகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமையல் இஞ்சி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பிடி இலை, சமையல் இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கைக்கு மண்டபம் அடுத்துள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரையிலிருந்து சமையல் இஞ்சி நாட்டுப் படகில் கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், நேற்று புதன்கிழமை இரவு மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரம் உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டின் உரிமையாளர் பெயர் தெரியாத நிலையில், அந்த வீட்டின் பின்புறம் இருந்து 60 சாக்கு மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட சமையல் இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இஞ்சி மூட்டைகளை மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் எடுத்து வந்த அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், முதல் கட்ட விசாரணையில் சமையல் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி இந்திய மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சமையல் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போது பிடிபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்