
-அம்பாறை நிருபர்-
இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்திற்கான வரவேற்பு வளைவு பிரதேச சபையின் அனுமதி இன்றி அமைக்க ஆரம்பித்தமை தொடர்பிலான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த தவணைக்கு முன்னதாக இரண்டு சமூகங்களும் மீண்டும் சேர்ந்து இதை எப்படியாவது தீர்த்துக் கொள்வது என்பதை குறித்து ஆராய்ந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் மன்றில் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதன்போது இரு தரப்பினரதும் வாதப்பிரதி வாதங்களை ஆராய்ந்த நீதிவான் இரு தரப்பினரும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுத்திருந்த போதிலும் சரியான தெளிவின்மையான செயற்பாடுகள் காணப்படுவதனால் மீண்டும் ஒரு முறை இரு தரப்பினரும் குறித்த விடயத்தில் சமூக பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டது.அத்துடன் எதிர்வரும் 06.03.2026 திகதிக்கு முன்பாக இரு தரப்பினரும் குறித்த விடயத்தின் முடிவினை ஆரோக்கியமானதாக பெற வேண்டும் என நீதிவான் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த வழக்கில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் சட்டத்தரணிகளான பௌஸான் சாமிளா மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்.
