இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஈரானின் அணுவாயுதத் திட்டம்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலின் மதிப்பீடு தொடர்பான அந்த நாட்டுத் தேசிய புலனாய்வு பிரிவின் ஆவணம் ஒன்று முன்னதாக கசிந்திருந்தது.

இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னதாக ஈரான் தமது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு பகுதிக்கு நகர்த்தியிருக்கலாம் எனவும், அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுவாயுத திட்டத்தை முழுமையாகச் சேதப்படுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை ஊடகவியலாளர்களிடம் தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பென்டகனின் பேச்சாளர் ஷோன் பார்னெல் (Sean Parnell), ஈரானின் அணுவாயுதத் திட்டம் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஈரானின் 3 அணுவாயுத திட்டங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்தநிலையில், குறித்த தாக்குதலின் பாதிப்பை மதிப்பிடுவதற்குப் புலனாய்வு பிரிவுக்கு சில நாட்கள் தேவைப்படும் எனவும் பென்டகனின் பேச்சாளர் ஷோன் பார்னெல் தெரிவித்துள்ளார்.