
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மீண்டும் சிறை!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு, தோஷகானா 2 வழக்கில் தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு விசேட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசரினால் அவருக்கு விலையுயர்ந்த ‘பல்காரி’ (Bulgari) ஆபரணத் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அரச விதிகளின்படி வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெறப்படும் இவ்வாறான அன்பளிப்புகள் அரசாங்க திறைசேரி ‘தோஷகானா’வில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இருப்பினும், குறித்த ஆபரணத் தொகுதியின் உண்மையான பெறுமதியை விட மிகவும் குறைவான மதிப்பீட்டைக் காண்பித்து, சட்டவிரோதமான முறையில் அதனை அவர்கள் கொள்வனவு செய்ததாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நீண்டகால சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையிலுள்ள இம்ரான் கானுக்கு இந்தத் தீர்ப்பு மற்றுமொரு பெரும் பின்னடைவாகக் கருதப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
