அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவுக்கு எதிரான புதிய விரிவான தடைகள் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை குறிவைக்கும் இந்தச் சட்டம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு எதிராக 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது.
“Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026” என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், ரஷ்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகள் மற்றும் தடைகளைத் தவிர்த்து ரஷ்ய எண்ணெயை கொண்டு செல்லும் எனக் கூறப்படும் கப்பல் வலையமைப்பையும் குறிவைக்கிறது.
இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளின் அமெரிக்காவுக்கான இறக்குமதிகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டம் அமலுக்கு வந்தவுடன் தானாகவே இந்தியா அல்லது சீனாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படாது; எந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும்.
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் கொள்வனவாளர்களான இந்தியாவும் சீனாவும் இந்த புதிய நடவடிக்கையால் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக உள்ளன. ரஷ்ய எண்ணெய் கொள்வனவை குறைப்பதற்கான அழுத்தம் இந்தியா மீது ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், புதிய சட்டம் அமெரிக்கா–இந்தியா வர்த்தக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளை பாதிக்கக்கூடும் என இந்திய வெளிவிவகார அமைச்சு முன்னதாக எச்சரித்திருந்தது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதைத் தொடரும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
புதிய சட்டம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









