இந்தியாவிற்கு படகில் தப்பிச்சென்ற குற்றப்பின்னணியுள்ள 3 சந்தேக நபர்கள் கைது
இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சகோதர மொழி பேசும் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில் இந்திய கடலோர பொலிஸார் கைது செய்து மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையைச் சேர்ந்த குற்ற பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக இந்திய கடலோர பொலிஸ் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸ் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நிற்பதை கண்ட இந்திய கடலோர பொலிஸ் படையினர் மணல் திட்டிற்கு சென்று பார்த்தபோது இலங்கை சேர்ந்த குறித்த மூன்று பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து மூவரையும் கைது செய்த இந்திய கடலோர பொலிஸார் அவர்களை மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த கபிலன் (வயது – 34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித் ரோலன் பெர்னாண்டோ (வயது – 43), மாதவிலக்கை சாகர குணதிலக (வயது – 33) ஆகிய மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் மன்னார் – பேசாலையிலிருந்து படகு மூலம் தலா 2 லட்சம் செலுத்தி இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இந்தியாவில் வந்து இறக்கியதாகவும், தமிழகத்திற்குள் ஊடுருவி பின் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் கபிலன் என்ற நபர் ஐஸ் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது பிணையில் இருப்பதாகவும், ஏனைய இருவர் மீதும் குற்றப் பின்னணி மற்றும் நிழல் உலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.