இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையான UPI மூலம் மேற்கொள்ளப்படும் சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை, வர்த்தகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 15ஆம் திகதி முதல், வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் 2,000 இந்திய ரூபாய்க்கும் அதிகமான சில UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் அறவிடப்படவுள்ளது. இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வணிகர்களுக்கு அனுமதி இல்லை.
இந்தக் கட்டணம் ‘Merchant Discount Rate’ (MDR) என அழைக்கப்படுகிறது. இது அரசாங்கம் வசூலிக்கும் வரி அல்ல என்றும், UPI அமைப்பை நிர்வகிக்கும் National Payments Corporation of India (NPCI) நேரடியாகப் பெறும் கட்டணமும் அல்ல என்றும் இந்திய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே இந்தத் தொகை பகிரப்பட்டு, UPI கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிர்கால விரிவாக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது. தனிநபர்களுக்கு இடையிலான பணப்பரிமாற்றங்கள் தொடர்ந்து இலவசமாக இருக்கும். வணிகர்களுக்கான 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளும் இலவசமாகவே இருக்கும். மேலும், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் QR குறியீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் சில சிறு வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் MDR பொருந்தாது. இதன் காரணமாக, தனிநபர் முதல் வணிகர் வரையிலான சுமார் 96 சதவீத பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய்க்கும் அதிகமான சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு, ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்புறுதி, எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகள் உள்ளிட்டவற்றுக்கு 5 ரூபாய் என்ற நிலையான கட்டணம் விதிக்கப்படும். மற்ற தகுதியான பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் அறவிடப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 300 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.
2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட UPI, தற்போது இந்தியாவின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையாக மாறியுள்ளது. சிறிய காய்கறி விற்பனையாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பல தரப்பினரும் இதைப் பயன்படுத்துகின்றனர். 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் UPI மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றின் மொத்த மதிப்பு 29.82 டிரில்லியன் இந்திய ரூபாயாக இருந்ததாக NPCI தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்படுவது UPI பயன்பாட்டை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் கூடுதல் செலவை ஏற்க விரும்பாத சில வணிகர்கள் மீண்டும் பணப் பரிவர்த்தனை முறையை நாடக்கூடும் என்ற கவலை முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், UPI போன்ற மிகப்பெரிய டிஜிட்டல் கட்டமைப்பை தொடர்ந்து பராமரிக்கவும், அதன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான செலவுகளை ஈடுகட்டவும் சந்தை அடிப்படையிலான கட்டண முறை அவசியம் என சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.









