இதுவரையில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை இடம்பெறவில்லை!

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ள போதிலும் இந்த பணிகள் இதுவரையில் உரிய முறையில் இடம்பெறவில்லை.

குறித்த அறிவிப்பு வெளியாகி 2 மாதங்கள் கடந்துள்ள போதிலும் அந்தப் பணிகள் தொடர்ந்தும் தாமதமடைந்துள்ளன.

கடந்த ஜூலை மாதம் முதல் முச்சக்கர வண்டி பயணக் கட்டணத்தைக் குறைப்பதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்திருந்தது.

இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாக தொடரும் எனவும் இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்குமான கட்டணம் 90 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயண கட்டணம் பயணிகளுக்குத் தெரியும் வகையில் மீற்றர் மானியைப் பொருத்தவும், முச்சக்கர வண்டியின் முன் இடது மூலையில் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த விலை செயற்பாடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை எனத் தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறை சங்கம் தெரிவித்துள்ளது.