ஆரம்ப மருத்துவமனையில் கட்டடங்கள் திறந்து வைப்பு!

-யாழ் நிருபர்-

 

தொல்புரம் ஆரம்ப மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பெற்ற வாகனத் தரிப்பிடம் மற்றும் நோயாளர் காத்திருக்கும் மண்டபம் என்பன இன்று திங்கட்கிழமை  சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

‘சுப்பையா பொன்’ ஞாபகார்த்தமாக, அவரது மகன் சுப்பையா வரதராசா  நிதி அனுசரணையில் நோயாளர் காத்திருப்பு மண்டபம் அமைக்கப்பட்டதுடன், அமரர்கள் துரைசிங்கம் சிவபாக்கிரம் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் திரு.து.சிவகுமார்   நிதி அனுசரணையில் வாகனத் தரிப்பிடமும் அமைக்கப்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வானது ஆரம்பமாகி,  முதலில் வாகனத் தரிப்பிடம் திரைச்சீலை நீக்கம் செய்யப்பட்டு,  நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன், அடுத்து நோயாளர் காத்திருப்பு மண்டபத்தின் திரைச்சீலை நீக்கம் செய்யப்பட்டு, நாடா வெட்டி வைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வீ.குருபரன் தலைமை தாங்கிய இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சுப்பையா வரதராசா,  சிறப்பு விருந்தினர்களாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,  சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், கௌரவ விருந்தினர்களாக சங்கானை பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி வை.யதுனந்தன், துரைசிங்கம் சிவகுமார், தேவமனோகரி சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், அயல் வைத்தியசாலை வைத்தியர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.