ஆபத்தான பட்ட மரத்தை வெட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை
-நானுஓயா நிருபர்-
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள ஆபத்தான பட்ட மரத்தினை உடனடியாக வெட்ட வேண்டும் என பொது மக்கள் , பாடசாலை மாணவர்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதாலும் வாகன போக்குவரத்துக்கு பிரதான வீதிகள் சந்திக்கும் இடமாக உள்ளதாலும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் குறித்த மரம் விழும் அபாயம் உள்ளது இதனால் குறித்த பிரதான வீதிகளை பயன்படுத்துவோருக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
மரம் குறித்து பொது மக்கள் கூறுகையில்,
50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பழமை வாய்ந்த மரம் உள்ளது இந்த மரம் தற்போது பட்டுபோய் உள்ளது. குறித்த மரத்தால் பாரிய அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது இதனால் பாடசாலை மாணவர்கள் ,பொது மக்கள் ,சாரதிகள் மற்றும் வியாபாரிகள் அச்சத்துடன் உள்ளோம். மரம் விழுந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், மரத்தை வெட்டி அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா பிரதேச செயலகத்தின் பொறுப்பான அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் தொடர்ச்சியாக அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.