அவுஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்ட F-35 போர் விமானங்களின் சில பாகங்கள் தவறுதலாக ஹொங்கொங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனும் F-35 விமானங்களை தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடனும் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார். இந்த பாகங்கள் ஏன் ஹொங்கொங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டன என்பது இதுவரை தெளிவாகவில்லை.
இந்த சரக்கில் F-35 விமானத்தின் காக்பிட் மூடுபாகமும் (canopy) இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ரேடார் கதிர்களை உறிஞ்சும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடையே பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், காணாமல் போன பாகங்கள் “உணர்வுப்பூர்வமான” அல்லது அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்டவை அல்ல என தமது புரிதல் இருப்பதாக மார்லஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் F-35 கூட்டு திட்ட அலுவலகமும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சில F-35 பாகங்கள் தொடர்பான சரக்கு பிரச்சினை குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவற்றை மீட்டெடுப்பதுடன், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
அவுஸ்திரேலியாவிடம் தற்போது 72 F-35 போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களுக்கான உலகளாவிய உதிரிப் பாகங்கள் விநியோகத் தொடரை லாக்ஹீட் மார்ட்டின் நிர்வகித்து வருகிறது. ஹொங்கொங்கிற்கு சென்ற பாகங்கள் தற்போது யாரிடம் உள்ளன என்பதும், அவை எவ்வாறு அங்கு சென்றன என்பதும் இன்னும் விசாரணையில் உள்ளது.









