
அல்சரானது மிகுந்த வலியை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது தவிர மிகுந்த அசௌகரியத்தையும் உண்டாக்கும். குறிப்பாக வயிற்றில் ஏற்படும் அல்சருக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
வயிற்றில் அல்சர் இருந்தால், அவர் எரிச்சலுடனான கடுமையான வயிற்று வலி,எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்திக்க கூடும். அதுவும் வயிறு வெறுமையாக இருந்தால், வயிற்று வலி கடுமையாக இருக்கும். ஒருவருக்கு பின்வரும் காரணங்களுக்காக அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது .
காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது, உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு காரணமாக அமைகின்றன.
மன அழுத்தம் ஒருவருக்கு நேரடியாக அல்சரை வரவழைப்பதில்லை. மாறாக, அது வயிற்றில் செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து, அல்சரை உண்டாக்குவதோடு, ஏற்கனவே இருக்கும் அல்சரை இன்னும் தீவிரமாக்கி, நிலைமையை மோசமடையச் செய்யும்.
சில சமயங்களில் பரம்பரையில் யாருக்கேனும் அல்சர் பிரச்சனை இருந்தால், அந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மரபணுக்கள் காரணமாக அல்சர் வருவதற்கான வாய்ப்புள்ளது.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும், புகைப்பிடிப்பவர்களுக்கும் அல்சர் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. ஏனெனில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது போன்றவை வயிறு மற்றும் குடல் சுவர்களை சேதப்படுத்தி, அல்சரை வரவழைக்கும்.
அல்சர் இருந்தால் சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் . அல்சர் புற்று நோயாக மாற வாய்ப்பு இருப்பதனால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று உங்களுக்கு அல்சர் வருவதை தவிர்த்து கொள்ளுங்கள் .
