அரை நிர்வாணமாக இரத்தம் கசிந்த நிலையில் உதவிக்கு யாரும் முன்வராத துயரம்

இந்தியா – மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தம் கசிந்த நிலையில் அரை நிர்வாணத்துடன் அவர் அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உதவி கேட்டுள்ளார். அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் அந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பட்நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு 12 வயதாகும் சிறுமியை சமூக விரோத கும்பல் ஒன்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. பின்னர் அந்த சிறுமியை கும்பல் விரட்டிய நிலையில் ரத்த கசிவுடன், அரை நிர்வாணமாக சிறுமி தெருவில் நடந்து சென்றார். அதைத் தொடர்ந்து தனக்கு உதவி செய்யுமாறு அங்கிருந்த வீடுகளின் கதவுகளை தட்டி அவர் உதவி கேட்டார். இதற்கு அங்கிருந்த யாரும் உதவ முன்வரவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் ஆசிரமம் ஒன்றை அடைந்துள்ளார். அங்கிருந்த பூசாரி சிறுமிக்கு உதவி செய்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் முதற்கட்டமாக மேற்கொண்ட ஆய்வில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுமிக்கு ஏற்பட்டுள்ள காயம் கொஞ்சம் பாரதூரம் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவருக்கு பொலிசார் இரத்த தானம் செய்துள்ளனர். தற்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சிறுமி தன்னுடைய முகவரியை தெரிவிக்க முடியாத சூழலில் உள்ளார்.

இதற்கிடையே குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து தகவல் ஏதும் தெரிந்தால் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் துறை கூறியுள்ளது. மேலும்இ குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இணையதளவாசிகள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்