அரபிக்கடலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதரக அதிகாரியை இந்தியா அழைத்துள்ளதாக, அல் ஜசீரா சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச கடற்பரப்பில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று இந்தியக் கடற்படைக் கப்பலுடன் மோதியதாக இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பொறுப்பதிகாரியிடம் இந்தியா உத்தியோகபூர்வ எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படைப் பிரிவுடன் மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் பாகிஸ்தான் கடற்படை “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற முறையில்” செயற்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறைந்தபட்சம் மூன்று கடல் மைல் இடைவெளியைப் பேண வேண்டும் என 1991ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த உடன்படிக்கையை மீறியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை இராணுவப் பிரிவுகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு, பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பதிகாரியிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் இதேபோன்ற எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற நான்கு நாள் நேரடி இராணுவ மோதலுக்குப் பின்னர், அணு ஆயுதங்களைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடியாக ஏற்பட்டுள்ள முதலாவது இராணுவப் பதற்றமாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
2019ஆம் ஆண்டு இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை புதுடெல்லி இரத்து செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தங்களது இராஜதந்திர உறவுகளின் மட்டத்தைக் குறைத்தன. அதன்பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைநகரங்களில் இரு நாடுகளுக்குமான தூதுவர்கள் நியமிக்கப்படவில்லை.
1947ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முக்கிய போர்களில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் இரண்டு போர்கள் காஷ்மீரின் அந்தஸ்து தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்டிருந்தன.









