அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்
இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கல்வித்துறையில் நிலவும் பாரிய இடைவெளியை வெளிப்படுத்தியுள்ளன.
திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 10,047 அரச பாடசாலைகள் உள்ளன.
இவற்றில் 3,065 பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகவே காணப்படுகிறது.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளில் ஒரு தேசிய பாடசாலையும் உள்ளடங்குகின்றமையாகும்.
நாட்டின் பல பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கையும் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.
1,645 பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை 50 க்கும் குறைவாக உள்ளது. இதில் ஒரு தேசிய பாடசாலையும் ஏனையவை மாகாண பாடசாலைகளுமாகும்.
1,648 பாடசாலைகளில் 51 முதல் 100 வரையான மாணவர்களே கல்வி பயில்கின்றனர். இவையனைத்தும் மாகாண பாடசாலைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் நாடு முழுவதும் 266,281 மாணவர்கள் மாத்திரமே முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தரவுகள் இலங்கையின் கல்வித்துறையில் நிலவும் வளப்பகிர்வு மற்றும் கிராமப்புற பாடசாலைகளின் எதிர்காலம் குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
