அரச துறை, கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை தமிழரசுக் கட்சி எம்.பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சத்தியலிங்கம் எம்.பி. தமது கேள்வியின் போது, சுமார் பத்தாயிரம் தற்காலிக, அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில், ரயில் கடவை காப்பாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனரா என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்; ரயில் கடவை காப்பாளர்கள் இதுவரை பெற்று வந்த 7500 ரூபா கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனினும், அதன் மூலம் ரயில்வே கடவைகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை முழுமையாக நிவர்த்தியடையும் என நாம் கூற முடியாது.

அதற்கு நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அரசாங்கமானது நிரந்தரமற்ற சேவை நிலையில் உள்ளவர்களை, ஒவ்வொரு மட்டத்திலும் சேவைகளுக்காக நியமித்துள்ளது.

அந்த வகையில் சுமார் 9,800 பேரை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.