அரசியலில் களம் இறங்கிய நடிகர் சுந்தர் சி : வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் தவெக தலைவர் விஜய்!

இந்தியாவின் தமிழகத்தில் அடுத்த மாதம் 23 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமனு கொடுத்தவர்களிடம், அந்த கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில், நாளை ஞாயிற்றுக்கிழமை த.வெ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை ஒன்றாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சியின் சார்பில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி போட்டியிடுவார் என்று அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை பாரதிய ஜனதா கட்சி சார்பில், புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.

அதில் மதுரை மத்திய தொகுதிக்கு சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.