அம்பாறை மாவட்டத்தில் யானைகள் 100 க்கும் அதிகமாக வருகை – பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தறுவாயில் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தருகின்றன.

குறிப்பாக சம்மாந்துறை வளத்தாப்பிட்டி மாவடிப்பள்ளி நிந்தவூர் இறக்காமம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டி பட்டியாக தினமும் யானைக் கூட்டங்கள் வருகை தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த யானைகளை கட்டுப்படுத்த இன்றும் கூட  வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் குறித்த யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை தாக்கி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு அம்பாரை மாவட்டம் சம்மாந்துறை  எல்லைக்குட்பட்ட புற நகர்  பகுதிகளில்  தற்போது வழமையாகி விட்டது.

மேற்குறித்த பிரதேச  வயல் வெளி பகுதியில்  தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக   காட்டு யானைகள் 40 முதல் 50 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.

யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகை  தொடர்கதையாகவே உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.