அமெரிக்காவில் முன்னெடுக்கப்படவுள்ள மூலோபாய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியோங்கும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இடையே நியூயோர்க்கில் இரு தலைவர்களும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தென் கொரியாவின் அமெரிக்க முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றதாக தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 350 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தின் கீழ், டெக்சாஸ் மாநிலத்தில் எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் முதலாவது முதலீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அணுசக்தி மற்றும் அலாஸ்கா திரவ இயற்கை எரிவாயு (LNG) திட்டம் உள்ளிட்ட முதலீடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு எரிபொருள் செறிவூட்டல் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுசுழற்சி செய்தல், கப்பல் கட்டுமானம் மற்றும் தென் கொரியாவிடம் போர்க்கால செயற்பாட்டு கட்டுப்பாட்டை மாற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
வட கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் உறுதியளித்துள்ளதுடன், கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்காக இரு நாடுகளும் நெருக்கமாகத் தொடர்பில் இருக்கவும் இணங்கியுள்ளன.









