-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு, இன்று திங்கட்கிழமை நடைபெற்றது
தவிசாளர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இவ் அமர்வில், 18 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய சபை அமர்வில், ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா ஐந்து நிமிடங்கள் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது
இதன்போது, தவிசாளர் தெரிவு தொடர்பான திருப்தியற்ற கருத்துக்களை ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சபையில் பகிரங்கமாக முன்வைத்தனர்.
குறுக்கிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், தவிசாளருக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்தனர்.
சபையில் அமளி துமளி ஏற்பட்டதை தொடர்ந்து, தவிசாளர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
சபையில் தற்போது கடமையாற்றும் செயலாளர் தொடர்ந்து கடமையாற்றுவதற்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மாதாந்த சபை கூட்டமானது, ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமையில் நடாத்துவதென்றும், வியாழக்கிழமை விடுமுறை நாளாக இருந்தால் புதன் கிழமைகளில் நடாத்துவதென்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், மஜ்மா நகர் சூடு பத்தினசேனை கொரோனா மையவாடிக்கு அலுவலக ஊழியர்களை கடமைக்கு அனுப்புவதை இடை நிறுத்தி, தனியார் நிறுவன காவலாளி ஒருவரை பாதுகாப்பு கடமைக்காக நியமிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சபையின் கொடுக்கல் வாங்கல் நிதி காசோலை நடவடிக்கைக்காக, பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்தல், பி.எஸ்.டி.ஜி.வேலைத்திட்டம், மற்றும் மீராவோடை வாராந்த சந்தை தொடர்பாக ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு, விசேட கலந்துரையாடலை மேற்கொள்ள, எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.