
-அம்பாறை நிருபர்-
வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதியால் பயணம் செய்பவர்களை பாதுகாப்பாக மீட்டு அறிவுறுத்தல் வழங்கி உதவி வருகின்ற மீட்புப்பணியாளர்கள் இறைவணக்கம் அவ்விடத்திலேயே மேற்கொண்டமை பலரது கவனத்தை ஈர்த்தது.
கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதி வீதிக்கு மேலாக நீர் பரவல் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. இதன் காரணமாக கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் தன்னார்வமாக அப்பகுதிக்கு வருகை தந்து கடந்த 2 நாட்களாக மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த அணியினர் தொழுகை நேரம் வந்தவுடன் வெள்ள நீர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உரிய பாதுகாப்பு உடையுடன் தமது சமயக் கடமைகளில் ஈடுபட்டமை அப்பகுதியினால் பயணம் செய்த அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
இதேவேளை குறித்த வீதிக்கான நிரந்தர பாலம் அமைத்து தருமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.




