-பதுளை நிருபர்-
முச்சக்கரவண்டி சாரதிகளும் வாகன சாரதிகளும் இணைந்து இன்று புதன்கிழமை பசறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
பசறை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மடூல்சீமை சந்தியில் பேரணியாக வந்து, பசறை-பிட்டமாறுவ வீதியையும், பசறை-செங்கலடி வீதியையும், பசறையிலிருந்து பெல்வத்தை செல்லும் வீதியையும் மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பசறையிலிருந்து செங்கலடி செல்லும் வீதி மற்றும் பசறை பிட்டமாறுவ செல்லும் வீதி பசறை பெல்வத்தை செல்லும் வீதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் தற்போது நிலவும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.