
அதி சொகுசு பேருந்து நீர்கொழும்பில் எரிந்து நாசம்
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்றைய தினம் புதன் கிழமை இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி கொண்டது. இதன் போது உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




