அரசாங்கங்களின் கடன் பெறும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வளர்ந்த பொருளாதார நாடுகள் தங்களது பொதுக் கடன் அளவைக் குறைப்பதை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரையொட்டி நியூயோர்க்கில் வழங்கிய நேர்காணலில் ஜோர்ஜீவா, அதிகரித்து வரும் அரசாங்கக் கடன் மற்றும் அதற்கான வட்டி செலவுகள் குறித்து கவலை தெரிவித்தார். கடன் அளவைக் குறைத்தல், நிதி ஒருங்கிணைப்பை முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய வங்கிகள் தங்களது கொள்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய பொதுக் கடன் தற்போது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 100 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக IMF தெரிவித்துள்ளது. பல வளர்ந்த நாடுகளில் கடன்–GDP விகிதம் உயர்ந்த நிலையில் இருப்பதுடன், அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் எதிர்காலத்தில் அரசாங்கங்களின் கடன் சேவைச் செலவுகளை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் IMF எச்சரித்துள்ளது.
மேலும், அதிகரித்து வரும் கடன் செலவுகள் வளர்ந்து வரும் மற்றும் குறைந்த வருமான நாடுகளையும் பாதிக்கக்கூடும் என IMF சுட்டிக்காட்டியுள்ளது. வளர்ந்த நாடுகளின் அதிக கடன் அளவும் உயர்ந்த பத்திர வட்டி விகிதங்களும் உலகளாவிய கடன் சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், ஏற்கனவே கடன் சுமையை குறைக்க முயற்சித்து வரும் நாடுகளின் முன்னேற்றமும் பாதிக்கப்படலாம் என ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.









