ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது

-பதுளை நிருபர்-

பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பெரேரா மாவத்தையில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த நபர் இராணுவத்தில் கடமையாற்றும் போது அங்கவீனமுற்றவர் எனவும் இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது

சந்தேகநபர் பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த நபரின் வீட்டை சோதனையிட்ட போது, ​​விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த 320 சிறிய ஹெரோயின் பொதிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவர் அம்பகஸ்தோவ பகுதியில் வசிப்பவர் எனவும், பண்டாரவளை நகரில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று குறித்த வீட்டில் இருந்து வட்ஸ்அப் இலக்கம் ஊடாக போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபான, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் பெர்னாண்டோவின் ஆலோசனையின் பேரில், பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, அழைப்பாணை பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்