வீரமுனை நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் : இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு!

 

-அம்பாறை நிருபர்-

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

இது தவிர இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் வழக்கு தாக்கல் சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான நிகழ்வானது இனமுரண்பாட்டை இனவன்முறையினை ஏற்படுத்தும் என கடந்த வழக்கு தவணைகளில் சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

மேற்குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் 21 வரை ஒத்தி வைத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்