வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பதால் எரிபொருள் தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கயான் முனசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தீ விபத்துக்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான விபத்துக்கள் காரணமாக நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. வீடுகளில் எரிபொருள் சேமிப்பு வசதிகள் இல்லாததாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாததாலும் பெற்றோல் போன்ற எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்தானது என தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளின் பாதுகாப்பு தன்மையை சுட்டிக்காட்டிய அவர், கடந்த சில நாட்களாக எரிபொருள் தொடர்பான விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
ஜனவரி மாதம் வரை நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு பெற்றோல் தொடர்பான தீக்காய நோயாளிகள் மட்டுமே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது நான்கு முதல் ஆறு நோயாளிகள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.