வாழைச்சேனையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

ஜனாதிபதியின் கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு – வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது.

கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேச மில்லர் விளையாட்டுக் கழக இளைஞர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது 100 லீற்றர் கசிப்பு, 30 லீற்றர் கோடா, 10 வெற்று பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அவற்றினை பொதுமக்கள் முன்னிலையில் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தகவல் அறிந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முற்றாக கசிப்பு உற்பத்தியை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மில்லர் விளையாட்டு கழகத்தின் தலைவர் வ.வன்னியசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதேவேளை இவ் நடவடிக்கையின்போது தனக்கோ அல்லது ஏனையோர்களுக்கோ உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்