வவுனியாவைச் சேர்ந்த யுவதியே சடலமாக மீட்பு

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 48 பேர் பேருந்து ஒன்றில், நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். நுவரெலியா சென்று மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவுக்கு திரும்பிய வழியில் இறம்பொடை நீர்வீழ்ச்சியை பார்வையிட்டுள்ளனர்.

அதன்போது, அவர்களில் 7 பேர் கொண்ட குழுவினர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் அவர்களில் நால்வரை காப்பாற்றி கரைசேர்த்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல்போயிருந்த மூவரில் யுவதியொருவரின் சடலம், கற்பாறையொன்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுசாலினி (21) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.