வவுனியாவில் ஊடகவியலாளர் மத்தியில் கைகலப்பு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
-வவுனியா நிருபர்-
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது சக ஊடகவியலாளர் ஒருவரால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவமானது இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் வவுனியா உக்குளான்குளம் பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான வரதராஜன் பீரதீபன் (வயது-31) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக முகநூலில் அவதூறு பரப்பிவரும் சம்பவம் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்காக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் குடியிருப்பு பூங்காவில் பொதுக்கூட்டம் இன்று மாலை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் அவதூறு பரப்பிய நபரும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போது திடீரென உணச்சிவசப்பட்ட குறித்த அவதூறு பரப்பிய ஊடகவியலாளர் தன்வசம் இருந்த தலைக்கவசத்தால் தன்னை கேள்வி கேட்ட சக ஊடகவியலாளரை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் குறித்த ஊடகவியலாளர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த ஊடகவியலாளர் இங்கிருந்த பெண் ஊடகவியராளரையும் தள்ளி வீழ்த்தியதுடன் அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளையில் அருகில் இருந்த சகஊடகவியலாளர்களால் இச்சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலை மேற்கொண்ட நபரே வவுனியா ஊடகவியலாளர் மீதும் ஊடக அமையம் மீதும் முகநூலில் வாயிலாக கடந்த சிலதினங்களாக அவதூறு பரப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்