வறுமை கோட்டிலுள்ள குடும்பங்களுக்கு மாதம் 20000 : சஜித் உறுதி

வறுமையை போக்குகின்ற நோக்கில் மாதம் ஒன்றுக்கு 20000 ரூபா விதம் 24 மாதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 44 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குளியாபிட்டிய நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு அதல பாதாளத்தில் விழுந்து மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படாத ஒரு யுகத்தில் இருக்கின்றோம்.

குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மந்த போசனை அதிகரிக்கின்ற இந்த யுகத்தில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விருத்தியடையச் செய்வதற்கான யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

இளைஞர் சமூகத்திற்காக ஒரு மில்லியன் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு வறுமையை போக்குகின்ற நோக்கில் மாதம் ஒன்றுக்கு 20000 ரூபா விதம் 24 மாதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.