யாழ் மத்திய பேருந்து நிலை பயணிகள் நலன் கருதி பொலிஸ் காவலரண்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ்ப்பாண மாநகரசபை உத்தியோகத்தர்கள், இ.போ.ச அதிகாரிகள், பொலிசார், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிசாருக்கு ஏற்படுத்தி கொடுக்குவாறு இ.போ.ச அதிகாதிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது .
பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு அக்கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது.
மேலும் பேருந்து வளாகத்தின் தூய்மை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பயணிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் இ.போ.ச அதிகாரிகளுக்கு அமைச்சரால் வலியுறுத்தப்பட்டதுடன் குறித்த நடவடிக்கைகளை அடுத்த 10 நாள்களுக்குள் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது
சாரதி மற்றும் நடத்துனருக்கான ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்படமை குறிப்பிடத்தக்கது.