முஸ்லிம்களுக்கு எதிரான சகலரும் சஜித்துடனேயே உள்ளனர் – சாய்ந்தமருதில் அமைச்சர் அலி சாஹிர்
இன்று நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கிறது. நாட்டு மக்களுக்கு படிப்படியாக சலுகை கிடைக்கிறது. மக்கள் சந்தோஷமாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அனைத்து இன மக்களும் பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாடினர். இந்த நிலைமை தொடர வேண்டும் என, அமைச்சர் அலி சாஹிர் மௌளானா தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் கல்முனைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பிரச்சார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி நீடிக்க வேண்டும். இன்று முஸ்லிம்களுக்கு எதிராக வைத்தியர் சாபியை நெருக்கடிக்குள் தள்ளிய சன்ன ஜயசுமன, சம்பிக்க ரணவக, தயாசிறி ஜயசேகர போன்றவர்களும் ரிஷாதுக்கு எதிராக குரல் தொடுத்த ஆனந்த சாகர தேரர் மற்றும் ரிஷாதை ஒரு பயங்கரவாதி அவரை கைது செய்வேன் என்று சொன்ன மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவும் இன்று சஜித்துடனேயே உள்ளனர்.
அதேபோல் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு துணைபோன நாலக கொடஹேவா போன்றவர்களும் இன்று சஜித் அணியிலேயே உள்ளனர். எனவே, மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டியது அவசியம்.” என்றார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.