முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி : கல்முனை மனித உரிமை செயற்பாட்டாளருக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் வீட்டிற்குச் சென்ற பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது என்றும் , அது பயங்கரவாதிகளுக்கான நினைவு நாள் என்றும் அதையும் மீறி செய்தால் கைது செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாடானது நீதிமன்ற கட்டளை எனவும் கூறி ஒரு நீதிமன்ற கட்டளையையும் வழங்கியிருந்ததோடு பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தை சூழவும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பொலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக தாமோதரம் பிரதீவன் மின்னல்24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது தமது பசியை ஆற்றியதோடு மக்களின் உயிர்காத்த கஞ்சியை அந்த நாட்களின் நினைவாகவும் அங்கு உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வாகவும் நாம் அனுஷ்டிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினங்கள் அல்லது நினைவு வாரத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையிலே அது பயங்கரவாதிகளை நினைவு கூருகின்ற தினம் என அதிலே குறிப்பிடப்பட்டிருப்பதோடு நீதிவான் நீதிமன்றம் கல்முனை என்று ஒருவருடைய கையெழுத்தும் அதில் இருக்கிறது ஆனால் எந்த நீதிமன்றத்திற்குமான இறப்பர் முத்திரை அதிலே இல்லை என்பதையும் தெரிவித்தார்.

நீதிமன்ற தடை உத்தரவில் தாமோதரம் பிரதீவன் ,புஷ்பராஜ் துஷானந்தன் ,விநாயகம் விமலநாதன் ,தம்பிராசா செல்வராணி ,கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினமும் இவ்வாறு ஒரு சம்பவம் இங்கு நடைபெற்றிருந்ததையும் பிரதீவன் நினைவுபடுத்துவதோடு, இதில் அம்பாரை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியை கைதுசெய்ய முயற்சித்திருந்ததோடு, சமூக செயற்பாட்டாளர் பு.துஷாநந்தனுக்கு நீதிமன்ற தடையுத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனும் இணைந்து கல்முனை மனித உரிமையத்திற்குச் சென்று முறைப்பாடுகளையும் கையளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்