
கல்முனை மத்திய பேருந்து தரிப்பிடத்தின் கவலைக்கிடமான நிலை
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள பேருந்து தரிப்பு நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவதால் பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பேருந்து தரிப்பு நிலையம் உள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் மழை காலங்களில் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொள்வதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், குருநாகல், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு நாளாந்தம் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
நீண்ட தூரம் பிரயாணிக்கும் பயணிகள் தங்குவதற்கும், குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இந்த பேருந்து தரிப்பு நிலையத்தை சகல வசதிகளுடன் கூடியதாக புனரமைத்துத் தருமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பேருந்து நிலையத்தின் மேல் கட்டடத்தில் நீண்ட காலமாக புறாக்கள் காணப்படுவதனால் ஒரு சரணாலயமாக காணப்படுவதாகவும் அதன் எச்சங்கள் நிறைந்த இக்கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature