மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று!

நவம்பர் 25ஆம் திகதி இரவு 1130 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும், தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து 410 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பின் தாக்கத்தினால், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.