மட்டக்களப்பு கரடியனாற்றில் மின்னல் தாக்கம்: குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
குறித்த நபர் காயன்குடா வயல் பகுதியில் கூலி வேலைக்காக நேற்றைய தினம் சென்ற வேளையிலேயே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்திற்கு வருகைதந்துடன் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .