
மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள “தையல் நிலையம்” மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக குறித்த தையல் நிலையத்தை அமைப்பதற்கு பிரதான அனுசரனையாளராக திகழும் சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் திருமதி.ரமணதாஸ், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரும் ஊடகவியலாளருமான ஜெபி ஜெனார்த்தனன், சமூக செயற்பாட்டாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான இராசலிங்கம் விக்னேஸ்வரன், தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் சிவகுமாரி செல்வராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜசோதா ராஜசேகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.எல்.எஸ்.ஹய்றியா,
சமூக செயற்பாட்டாளர் தேசமான்ய ஏ.எல்.எம்.மீராஸாகிப், கைத்தொழில் அபிவிருத்தி சபையின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வியாபார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர் நாகேந்திரன் கோகுலதாஸ் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் தையல் துறையில் ஆர்வமுள்ள சுய தொழில் முயற்சியாளர்களது தொழில் முயற்சியினை மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
“சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்” எனும் தொனிப்பொருளில் சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “தையல் நிலையம்” மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான சந்தைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியின் ஆறாம் இலக்க கடையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது கடந்த ஒரு வருடமாக சுயதொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மிகவும் திறம்பட செயலாற்றிவருவதுடன் இம்முயற்சிக்கு சிவனருள் பவுண்டேசன் அமைப்பும் தமது அனுசரனையினை வழங்கி தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதிகள் சிலவற்றையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Beta feature