மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட தந்தை

புத்தளத்தில் வீதியோரம் காத்திருந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வர்ணகுலசூரிய ஜனதா திசேரா (வயது – 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பிரதான பாடசாலை ஒன்றில் 9ஆம் வகுப்பில் பயிலும் ஒரே மகனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக பாடசாலை பேருந்து வீதியை மாற்றும் வரை வீதிக்கு அருகில் காத்திருந்துள்ளார்.

இதன் போது வேகன்ஆர் வகை கார் அதிவேகமாக வருவதைக் கண்ட தந்தை மகனைக் கையால் தள்ளி காப்பாற்றியுள்ளார். எனினும் தந்தையால் அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, ​​கார் மோதி விபத்துக்குள்ளானது.

மகன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், தந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

கார் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

கார் சாரதி தூங்கியதால் ஏற்பட்ட அதிவேகமே விபத்துக்கு காரணம் எனவும் விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.